" alt="" aria-hidden="true" />
டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரு சாரார் ஊர்வலம் நடத்தினார்கள்.
அந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. சரமாரியாக கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.
இன்று (வியாழக்கிழமை) காலை பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் மருத்துவமனைகளில் இருந்தவர்களில் மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது காலை 9 மணிக்கு தெரியவந்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கலவரம் தொடராமல் இருப்பதற்காக டெல்லி வடகிழக்கு பகுதியில் துணை நிலை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கலவரப் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று பெரிய அளவில் மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதலே டெல்லி வடகிழக்கு பகுதியில் ஒரு வித இறுக்கமான அமைதி நிலவியது. கலவரம் நடந்த பகுதிகளில் மக்கள் இன்றும் சற்று பதட்டத்துடன் காணப்பட்டனர். புதிதாக மோதல் ஏற்படாததால் மக்கள் மத்தியில் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
கலவர பகுதிகளில் நேற்று மாலை டெல்லி முதல்- மந்திரி கெஜ்ரிவால் மக்களை சந்தித்து பேசினார். அமைதி காக்கும்படி அவர் பொதுமக்களை கைகூப்பி கேட்டுக்கொண்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
கலவரம் அதிக அளவில் நடந்த ஜாப்ராபாத், மவ்ஜிபூர், சந்த்பாக், கர்வல்நகர் ஆகிய பகுதிகளில் தீவைத்து எரிக்கப்பட்ட வாகனங்கள் இன்னமும் அகற்றப்படவில்லை. தீவைத்து எரிக்கப்பட்ட வீடுகளும் அப்படியே உள்ளன. இதனால் அந்த பகுதிகள் போர்க்களம் போல காட்சியளிக்கின்றன.
கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட சந்த்பாக் பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்கிறார்கள். அங்கு இன்று காலை மயான அமைதி நிலவியது. அங்குள்ள இந்துக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
கர்வல் நகர் பகுதியில் நிறைய முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 60 குடும்பத்தினர் நேற்று போலீசார் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
சில இடங்களில் முஸ்லிம்களை போலீசாரே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.